ஏற்காடு பேருந்து விபத்து - வேகத்தால் பறிபோன 5 உயிர்கள்
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மேலும் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் பலர் ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு படையெடுத்து வருகிறனர்.
நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏற்காடு வாழவந்தி பகுதியை சேர்ந்த மணி என்ற ஜனார்த்தனன் (வயது 30) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26) என்பவர் இருந்தார். . பஸ்சில் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 13-வது கொண்டை ஊசி வளைவில் வேகமாக வந்த போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை இடித்து கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன், கார்த்திக், ஹரிராம், சந்தோஷ், மாது ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
இதனிடையே ஜனார்த்தனன் மீது சட்டப்பிரிவு 279 (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல்), 337 (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி சிறுகாயத்தை ஏற்படுத்துதல்), 398 (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி கொடுங்காயத்தை ஏற்படுத்துதல்), 304 (ஏ) (அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காயமடைந்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டிரைவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ஜனார்த்தனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளனர்.