கரூரில் சாலையில் சாகசம் செய்த வாலிபருக்கு சிறை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்.என்.எஸ். திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் தங்கபாண்டியன் வயது 36. இவர் நவம்பர் 20ஆம் தேதி அவருடைய டிவிஎஸ் 50 வாகனத்தில், கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் வரையிலான பகுதியில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும்,
பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் மற்றும் சாகசம் செய்யும் விதத்திலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி அதனை முகநூல் பக்கத்தில் பதிவு செய்து சமூக வலைத்தளங்கள் மற்றும் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வேகமாக பரவி வந்தது. இது தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் & காவல்துறை துணைத் தலைவர் ஆகியோர் உத்தரவின் படி கரூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டு,
மேற்கண்ட தங்கபாண்டியனை கைது செய்தனர். மேலும், அவர் மீது வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்.பி பிரபாகர் விடுத்துள்ள அறிக்கையில்,
இதுபோல எவரேனும் சாகசம் செய்வதாகவோ, பேசியோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், இதுபோன்ற நடவடிக்கையில் எவரேனும் ஈடுபட்டால் பொதுமக்கள் 04324- 296299 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.