தனுஷ் களமிறங்கிய ராயன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!

தனுஷ் களமிறங்கிய ராயன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!

திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் இன்று உலக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட மூஞ்சு, ராயன் ரம்பல் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கதைக்களம் ;

தனுஷின் தாய் தந்தை இருவரும் Town-னுக்கு சென்று வருகிறோம், தங்கையையும், இரண்டு தம்பியையும் பார்த்துக்கொள் என தனுஷிடம் கூறிவிட்டு செல்கிறார்கள். ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனால் தனது தம்பிகள் மற்றும் தங்கையுடன் ஊர் பூசாரியிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த இடத்தில் கைக்குழந்தையாக இருக்கும் தனுஷின் தங்கையை வேறொருவரிடம் விலை பேசி விற்க பார்க்கிறார் பூசாரி. இதை அறிந்து கொண்ட தனுஷ், பூசாரியிடம் சண்டை போடுகிறார்.

வேறு வழியே இல்லை என்ற நேரத்தில் கையில் அரிவாள் எடுத்து பூசாரியை கொன்றுவிடுகிறார் தனுஷ். சிறு வயதிலேயே தனது தனுஷ் கையில் ரத்தக்கறை படிந்து வருகிறது. இதன்பின் அந்த ஊரில் இருந்து சென்னைக்கு தனது தம்பிகள், தங்கையுடன் செல்லும் தனுஷ் அங்கு செல்வராகவனை சந்திக்கிறார்.

செல்வராகவனின் உதவியோடு புது ஊரில் வேலை தேடிக் கொள்கிறார். காலம் கடக்க அனைவரும் பெரியவர்கள் ஆகிறார்கள். நால்வரும் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வரும் சமயத்தில் தனுஷின் பெரிய தம்பி சந்தீப் கிஷனால் பிரச்சனை ஒன்று வருகிறது.

சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் துரை என்பவரின் மகனை சந்தீப் கிஷன் கொன்றுவிட, இதனால் சந்தீப் கிஷனை கொள்ள வேண்டும் என துரை முடிவு செய்ய, இதன்பின் என்ன நடந்தது? தனுஷ் எடுத்த முடிவு என்ன என்பதே படத்தின் மீதி கதை.

ராயன் திரைவிமர்சனம் ;

தனது 50 ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்த தனுஷின் தைரியத்தை பாராட்ட வேண்டும். நம்பகத் தன்மையான கதைக்களத்தை உருவாக்குவதற்கும் போலித்தன்மை இல்லாமல் கதாப்பாத்திரங்களை இயல்பாக உருவாக்குவதற்கும் வெற்றிமாறனின் வடசென்னை தனுஷுக்கு மிகப்பெரிய பக்கபலமாக நிச்சயம் இருந்திருக்கிறது என்று சொல்லலாம். நிதானமான ஒரு கதைக்களத்தை கட்டமைத்து கொஞ்சம் கொஞ்சமாக பில்டப் கொடுத்து ஒரு அதிரடியான இண்டர்வல் ப்ளாக் உடன் முடிகிறது முதல் பாகம்.

உண்மையில் படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் காட்டுவது தனுஷ் இல்லை துஷாரா தான். ராயன் மற்றும் துர்காவிற்கு இடையிலான உறவின் வழி ராவணன் மற்றும் சூப்பனகைக்கும் இடையிலான உறவை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறார் தனுஷ்.

நடிப்பு

தனுஷின் அமைதியான சுபாவம், தேவையான இடத்தில் மாஸ், தம்பி தங்கை செண்டிமெண்ட் எல்லாம் பார்க்கும்போது ரஜினியின் பாட்சா படம் பல இடங்களில் நினைவுக்கு வருவது இயல்புதான். ஆனால் தனது கதாபாத்திரம் மட்டுமில்லாமல் படத்தில் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனுஷ் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் கதை தொடங்கி வைப்பது சந்தீப் கிஷன் என்றால். இரண்டாம் பாகத்தில் துஷாரா விஜயன் தனுஷைக் காட்டிலும் ஒரு படி மேலே செல்கிறார். படம் முழுக்க வரும் செல்வராகவன், இரண்டாம் பாதியில் கவனம் பெறும் எஸ்.ஜே சூர்யா என திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன தொய்வுகளை நடிகர்கள் தங்கள் நடிப்பால் எளிதாக மறைத்துவிடுகிறார்கள்

மைனஸ்

தேவையற்ற ஆக்‌ஷன் காட்சிகளை ஒரு சில இடங்களில் தவிர்த்து டிராமாவை இன்னும் கொஞ்சம் டெவலவ் செய்திருக்கலாம். அவ்வப்போது நெல்சன் பாணியில் வரும் டார்க் காமெடிகள் நன்றாகவே வர்க் அவுட் ஆகியிருக்கின்றன என்றாலும் ஹ்யூமரில் கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார் தனுஷ்.

செம கெத்தாக அறிமுகமாகும் பிரகாஷ் ராஜ் வழக்கமான குள்ளநரி ரோலில் சுருங்கிவிட்டது வருத்தம்பா..

படத்தின் நிறைய காட்சிகள் இருளில் எடுக்கப்பட்டிருப்பதும் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அவற்றை ஒருவிதமான மங்கலான தன்மையில் பதிவு செய்திருப்பதும் காட்சி அனுபவத்தை கூட்டும் அம்சங்கள்.

வழக்கமான கதை டெம்பிளெட் தான் என்றாலும் ராயன் படம் இரண்டாம் பாதியில் தனித்து தெரிவதற்கு முக்கிய காரணம் மிகைப்படுத்தல் இல்லாமல் உணர்ச்சிகளை மிக நேர்த்தியாக கதை நெடுக கைவிடாமல் தனுஷ் கையாண்டிருக்கும் விதம்.

Tags

Next Story