தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட ரஜினி என்ற சுனாமி..!!

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட ரஜினி என்ற சுனாமி..!!

Rajinikanth

இரண்டு ரூபாய் சம்பளத்தில் தொடங்கி ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ள ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ் சினிமாவில் சின்ன ரோலில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக புகழை அடைந்திருக்கும் ரஜினி இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ரஜினி நடிக்க வருவதற்கு முன்பு பஸ் கண்டெக்டராக வேலை பார்த்து வந்தது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், பஸ் கண்டெக்டர் வேலைக்கு முன்னதாக பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அதில், ரஜினிக்கு ஒரு நாளைக்கு ரூ.2 சம்பளமாக வழங்கப்பட்டது. மொத்தமாக மாதத்திற்கு ரூ.60 சம்பளமாக ரஜினி பெற்றுள்ளார். இதுதான் அவர் வாங்கிய முதல் சம்பளம் என்று கூறப்படுகிறது.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ரஜினி தனது டீனேஜ் வயதில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் சென்று காதலை சொன்னபோது, ரஜினி கருப்பாக இருப்பதை காரணம் காட்டி அவரை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது உன்னை விட அதிக நிறம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து காட்டுறேன் என்று ரஜினி சவால் விட்டதாக கூறப்படுகிறது. ரஜினி நடிகரான பிறகு தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்துள்ளார்.

ரஜினியின் தாய் மொழி என்றாலும் அதில் ஒரு படம் கூட ரஜினி நடித்தது இல்லை. ரஜினியின் தாய் அவருக்கு 9 வயது இருக்கும்போதே இறந்து விட்டதால், அண்ணனின் மனைவியே ரஜினியை அரவணைப்போடு வளர்த்துள்ளார். அதனால் அன்னை ஓர் ஆலயம் படத்தில் பாடல் காட்சியில் நடிக்கும் போது தனது அம்மாவை நினைத்து ரஜினி உண்மையில் கண்கலங்கியுள்ளார்.

கடந்த 48 ஆண்டுகளில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் ரஜினி திரையில் ஆயிரக்கணக்கான வசனங்கள் பேசி இருந்தாலும், அவர் முதன் முதலில் பேசிய வசனம்” பைரவி வீடு இதுதானா...நான் பைரவியோட புஷன்..” என்பதே. மூன்று முடிச்சு படத்தில் ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி போட்டு வாய்க்கு கொண்டு வந்த ரஜினி காந்தமாக ரசிகர்களை ஈர்க்க தொடங்கினார்.

பைரவி, புவனா ஒரு கேள்விக்குறி போன்ற பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் நடித்து வந்த ரஜினி முதன் முதலில் நடித்த கலர் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இதில் லதாவுக்கு அண்ணனாக ரஜினி நடித்திருப்பார்.

1978ம் ஆண்டு அந்த ஒரே வருடத்தில் மட்டும் 20 படங்களில் நேரமில்லாமல் ரஜினி பிசியாக நடித்து வந்தார். பெங்களூரு, சென்னை என ஓய்வில்லாமல் ஓடியதால் தான் இன்று உலக அளவில் புகழை எட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் துணை நடிகராகவும், வில்லனாகவும் மட்டுமே இருந்த ரஜினி ஹீரோவாக மாறிய பைரவி படத்தில் தான். இந்த படத்தில் தான் வில்லனை ரஜினி எதிர்க்கும் காட்சி முதன் முதலில் இடம்பெற்றது.

16 வயதினிலேயே படத்தில் ரஜினி நடிக்கும்போது அவருக்கு ரூ.2500 தான் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவருடன் நடித்த கமல்ஹாசன் ரூ.30000 சம்பளம் பெற்றுள்ளார். அப்போது ரஜினி கமல்ஹாசனை போல் நானும் அந்த அளவுக்கு சம்பளம் வாங்குவேனா என ஏக்கத்துடன் ஸ்ரீதேவியின் தாயிடம் கேட்டுள்ளார்.

80களில் தென்னிந்தியாவில் ஓடும் ரஜிலில் டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை ரஜினி பெற்றார். முரட்டுக்காளை கிளைமாக்ஸ் காட்சியில் ஓடும் ரயிலில் ரஜினி சண்டையிட்ட காட்சி இந்திய அளவில் பேசப்பட்டது.

முதன்முதலில் ஹாலிவுட்டில் நடித்த நடிகர் என்ற பெருமையையும் ரஜினி பெற்றுள்ளார். 1988ம் ஆண்டு ”பிளட் ஸ்டோன்” என்ற ஹாலிவுட் படத்தில் ரஜினி நடித்துள்ளார். அதில் ரஜினி பேசிய “Money money money" என்ற வசனம் தான் மங்காத்தா படத்தில் நடித்த அஜித் பேசி இருப்பார்.

இந்தியில் ரஜினி நடித்த 24 படங்களில் பெரும்பலானவை 100 நாட்களை தாண்டி ஓடியது. இந்திய திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் பச்சன் என மூன்று பேரும் இணைந்து நடித்த ஒரே இந்தி படம் கிராஃப்தார்.

மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே படம் தளபதி. இந்த படம் ரஜினிக்கு திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகவே அமைந்தது. மலையாள ஸ்டார் மம்முட்டியுடன் ரஜினி நடித்த தளபதி படம் ரசிகர்களின் ஆல்டைம் பேவரை ட் படமாக உள்ளது.

ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும், ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பலர் நினைத்தாலும் ரஜினி நடிக்க விரும்பி நிறைவேறாத படம் உள்ளது. ரஜினிக்கு கலைஞரின் கதை, வசனத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் போனது.

70,80களில் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்றார் போலும், 2000 ஆண்டுகளில் அதிரடி மற்றும் குடும்ப காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரஜினி, தற்போது காலத்திற்கு ஏற்றார்போல் காத்திக் சுப்புராஜ், நெல்சன், மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட புதிய தலைமுறை இயக்குநர்களிடம் நடித்து வருகிறார்.

வயதுக்கு ஏற்ப ரஜினியின் தோற்றம் மாறினாலும் அந்த ஸ்டைலும், அழகும் விறுவிறுப்பான நடிப்பும் என்றும் மாறாமல் இருப்பதால் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

Tags

Next Story