விடுதலை 2 ஆம் பாகத்தின் கதை மற்றும் திரைவிமர்சனம் !

விடுதலை 2 ஆம் பாகத்தின் கதை மற்றும் திரைவிமர்சனம் !

விடுதலை 2

சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மையமாக வைத்து படங்களை இயக்குபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது இவர் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியானது.

விடுதலை 2 ஆம் பாகத்தின் கதை :

முதல் பாகத்தில் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறார். கவுதம் மேனன் இதை மேல் அதிகாரிகளிடம் கூற, அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் இருக்கும் ராஜீவ் மேனன் உத்தரவின்படி, விஜய் சேதுபதியை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். விஜய் சேதுபதியை அழைத்து செல்லும் ஜீப் டிரைவராக சூரி இருக்கிறார். இந்த பயணத்தில் ஒரு கட்டத்தில் காட்டுக்குள் இவர்கள் சிக்கிக்கொள்ள எந்த பக்கம் போவது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் வாத்தியார் விஜய் சேதுபதி, தன்னுடைய முன் கதையை சொல்ல துவங்குகிறார். தனது கிராமத்து எதிராக, தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கொடுமை, இனி அடுத்த தலைமுறைக்கு நடக்க கூடாது என்பதற்காக, கருப்பன் (கென் கருணாஸ்) ஒரு கொலை செய்கிறார்.

இதை அறிந்த விஜய் சேதுபதி, அவரை பண்ணை வீட்டாளர்களிடம் இருந்தும், போலீசிடம் இருந்து காப்பாற்ற, ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். கருப்பனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என போலீஸ் சொல்ல, அவரை போலீசில் சரணடைய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால், போலீஸ் துரோகம் செய்ய, கருப்பன் மற்றும் அவரது மனைவியை பண்ணை வீட்டாளர்கள் கொலை செய்கிறார்கள்.

இதில் விஜய் சேதுபதிக்கு உயிர் போகும் நிலைமை ஏற்படுகிறது. விஜய் சேதுபதியை கம்யூனிஸ்ட்டான கிஷோர் காப்பாற்றுகிறார். இதன்பின் கிஷோர் உடன் இணைந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்கிறார் விஜய் சேதுபதி. ஒடுக்குமுறை, தீண்டாமை என, இதுபோல் பல விஷயங்களை வைத்து மக்களை அடிமைப்படுத்தி வருபவர்களுக்கு எதிராக போராடும் விஜய் சேதுபதி, அதே சிந்தனையை கொண்டுள்ள மஞ்சு வாரியரை சந்தித்து, காதலிக்கவும் துவங்குகிறார். இருவருக்கும் திருமணமும் நடக்கிறது.

தனக்கு உயிர் கொடுத்த கிஷோரை தனது உயிராக விஜய் சேதுபதி பார்க்கிறார். ஒரு கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வன்முறையாலும் தட்டிக் கேட்கலாம் என முடிவு செய்யும் விஜய் சேதுபதி, கிஷோரிடம் இருந்து வெளியேறுகிறார். விஜய் சேதுபதி வெளியேறிய சமயத்தில், கிஷோர் கொலை செய்யப்படுகிறார். தனது உயிரை நினைத்த ஒருவரை கொலை செய்தவர்களை பழி வாங்குகிறார் விஜய் சேதுபதி.

தனது கதையை சொல்லி முடித்த விஜய் சேதுபதி, பாலத்திற்கு வெடி வைத்தது எப்படி, அதனால் பல மக்களின் உயிர்களை போக காரணம் யார் என்பதையும் போலீசிடம் கூற, வாத்தியார் மீது உள்ள போலீசின் பார்வை மாறுகிறது. இந்த சமயத்தில் விஜய் சேதுபதியை காப்பாற்ற அவருடன் தோழர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

விமர்சனம் :

இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிறப்பாக செதுக்கியுள்ளார். முதல் பாகத்தில் இடையிலேயே சென்ற தமிழ் என்கிற கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தது திரைக்கதையின் திருப்புமுனை.

முதல் பாகத்தில் இந்த கதையை சூரி சுமந்து சென்ற நிலையில், இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துடன் பயணிக்க வைக்கிறார் வெற்றிமாறன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகாரம் என்னென்னவெல்லாம் செய்யும், தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது ஒரு மனிதம் எப்படி மாறுவான் என்பதை அழகாக காட்டியுள்ளார்.

போலீஸ் அதிகாரத்தின் கட்டளைக்கு கீழ் வேலை செய்கிறார்களா? அல்லது மக்களுக்காக வேலை செய்கிறார்களா என கேள்வி எழுந்த நிலையில், சூரி கதாபாத்திரம் எடுத்த முடிவு அருமையாக இருந்தது. கென் கருணாஸ் சில நிமிடங்கள் படத்தில் வந்தாலும் கூட, வாத்தியாரின் பாதைக்கு கென் கருணாஸின் வாழ்க்கை துவக்க புள்ளியாக அமைகிறது.

அதே போல் விஜய் சேதுபதியை வழிநடத்திய கிஷோர், மனைவியாக தோளோடு தோள் நின்ற மஞ்சு வாரியர், உடனிருந்த டி.ஏ, தத்துவத்தை பின்பற்றிய தோழர்கள் என திரைக்கதையில் புரட்சியின் வெளிப்பாடாக இருந்தது. ஆனால், விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் போஷனின் சில குழப்பங்கள். அதை புரியும்படி எடுத்திருக்கலாம். இது ஒன்று தான் மைனஸ் பாயிண்ட் ஆக உள்ளது. மற்றபடி அனைவரும் திரைக்கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

திரைக்கதை, வசனம், இயக்கம் என வெற்றிமாறன் அசத்தியுள்ளார். மக்களுக்காக போராடிய, ஆனால் மக்களுக்கே தெரியாமல் உயிர் நீத்த தலைவர்களை பற்றி விடுதலை 2 படத்தில், இயக்குனர் வெற்றிமாறன் அழுத்தமான கருத்தை பதிவு செய்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜ் ஒளிப்பதிவு வேற லெவல். எடிட்டிங் சிறப்பு. ஆனால் டப்பிங் சில இடங்களில் சொதப்பிவிட்டது. கதாபாத்திரங்கள் லிப் சின்க், வசனங்களுடன் சில இடங்களில் ஒத்துப்போகவில்லை.

Tags

Next Story