கும்பமேளா கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல் - என்ன நடந்தது? | king news 24x7

கும்பமேளா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்பமேளாவில் உள்ள பிரதான மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ்கள் நுழைவதும், வெளியே செல்வதுமாக இருந்தாலும் ஊடகத்தினர் உட்பட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை
உயிரிழப்புகள் நடந்திருப்பதை நேரில் கண்ட சாட்சிகளும் மருத்துவமனை வட்டாரங்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. ஆனால், காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் குறித்த எந்த தகவலும் அரசாங்க தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை. கும்பமேளாவின் முக்கியமான புனித நாளான இன்று அதிக பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள கூட்ட நெரிசல், தவறு எங்கே நடந்தது? என்ற பூதாகரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதிலும், ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான இன்றைய கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் அங்கே சுமார் 10 கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படியே, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
சில இடங்களில் தடுப்புகளை மீறி மக்கள் சென்றதே நெரிசலுக்கு காரணம் என கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரி ஆகாங்ஷா ராணா தெரிவித்தார். எனினும், அங்கே நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் அவர் கூறினார்.
காயமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோக்களை சமூக ஊடகமாமான எக்ஸ் தளத்தில் பார்க்க முடிகிறது.
இதையடுத்து, மௌனி அமாவாசை நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் பல ஊடக தகவல்கள் கூறுகின்றன.
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.
அந்த 3 நாட்களிலும் கூட ஜனவரி 29-ம் தேதியான இன்றைய தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கும்பமேளாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் இன்றைய தினம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.