சாத்தூர் அருகே 1300 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

சாத்தூர் அருகே வாகன சோதனையின் போது 1300 கிலோ குட்கா மற்றும் ரூ.3,35,000 ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச்சாவடி அருகே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற கார் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதால் விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீசார் கார் மற்றும் சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 1,300 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் குட்கா விற்பனை செய்த பணம் ரூ.3,35,000 ரொக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து சரக்கு வாகனம் மற்றும் காரை ஒப்படைத்தனர்.

சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த ஹபிப்(39) மற்றும் சஃபில்(38) ஆகிய இருவரும் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்து குமாரவேல்(39) என்பவர் உடன் சேர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சாத்தூர் தாலுகா போலீசார் இவர்களிடமிருந்து 1300 கிலோ குட்காவை பறிமுதல் செய்ததுடன் ஏற்கனவே குட்கா விற்பனை செய்த பணமான ரூ.3,35,000 பறிமுதல் செய்து குட்கா கடத்த பயன்படுத்திய கார் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரை கைது செய்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story