லஞ்ச வழக்கில் கைதான உதவி செயற்பொறியாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்
உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைவாளர் சாகுல் அமீது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். கட்டிட காண்டிராக்டர். இவர் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தலைவாசல் பகுதியில் 2 இடங்களில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தார். இதற்கான பில் தொகையை அனுமதிக்க கோரி செந்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைவாளர் சாகுல் அமீது ஆகியோர் பில் தொகையை அனுமதிக்க செந்திலிடம் ரூ.61 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அதை கொடுக்க விரும்பாத செந்தில் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் செந்தில் ரசாயன பவுடர் தடவிய ரூ.61 ஆயிரத்தை அவர்களிடம் கொடுக்க முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிச்சந்திரன், சாகுல் அமீது ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்தனர். பின்னர் துறை ரீதியான நடவடிக்கையாக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைவாளர் சாகுல் அமீது ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.