பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை

சத்திரக்குடி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன்(39). இவர் கடந்த 14.2.2023 அன்று காமன்கோட்டையிலிருந்து பரமக்குடி சென்ற அரசு நகர் பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்து சத்திரக்குடி சென்றபோது கண்ணன் பேருந்தில் இருந்த தனது உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பேருந்து ஓட்டுநர் கண்ணனை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். அதனையடுத்து ஓட்டுநர் புகாரின்பேரில், சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, பேருந்து கண்ணாடியை உடைத்து பொதுச்சொத்தை சேதப்படுத்திய கண்ணனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story