ராமநாதபுரத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3பேர் கைது
கைது செய்யப்பட்டவர்
ராமநாதபுரம் பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட பாலாமணி, செயற்பொறியாளர் பாண்டியராஜன், பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன். ராமநாதபுரம் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலகம் ராமநாதபுரம் நகர் சாலைத் தெரு பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த முன்னாள் அரசு வாகன ஓட்டுநரான பழனிச்சாமி, தேவகோட்டை ராம்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடன் தவணை முறையில் தனது பெயரில் வீட்டுடன் கூடிய நிலத்தை வாங்கி அனுபவித்து வந்துள்ளார்.
பழனிச்சாமி கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டதால், அற்கான பாக்கி தொகையை முழுவதையும் அவரது மகன் பிரவீன்குமார் செலுத்திவிட்டு தனது தாயார் பெயருக்கு மாற்ற ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். இது சம்பந்தமாக செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் மற்றும் பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரை பிரவீன்குமார் பலமுறை அணுகியுள்ளார். அப்போது இடத்தின் அளவு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலத்தை அளக்க வேண்டும், அதற்கு எங்களை தனியாக கவனிக்க வேண்டும். மேலும் நிலத்தை அளப்பதற்கு வாகனத்தில் செல்வதற்கான தொகையினையும் செலுத்த வேண்டும் எனக் கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன்குமார் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை பிரவீன்குமாரிடம் கொடுத்து, லஞ்சம் கேட்ட அலுவலர்களிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.
அதன்படி நேற்றிரவு பிரவீன்குமார் லஞ்ச பணத்தை செயற்பொறியாளரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் அங்குள்ள ஒப்பந்த பணியாளர் (அந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற) பாலாமணியிடம் கொடுக்கச் சொன்னார். அதன்பின் ரூ.10 ஆயிரத்தை பாலாமணியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமச்சந்திரன், ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் கையும் களவுமாக பாலாமணியை (65) பிடித்து கைது செய்தனர்.
மேலும் லஞ்சம் வாங்கச் சொன்ன செயற்பொறியாளர் பாண்டியராஜன் (57), பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் (57) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.