ரெயிலில் வந்த வியாபாரியிடம் 350 பவுன் நகை கொள்ளை

ரெயிலில் வந்த வியாபாரியிடம் 350 பவுன் நகை கொள்ளை

பைல் படம் 

திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகை வியாபாரியிடம் 350 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் தாலுகா சேவலூர் பகுதியை சேர்ந்தவர் கிக்சன் (வயது 47). நகை வியாபாரியான இவர், கேரளாவில் தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சென்னையில் செயல்படும் பிரபல நகைக்கடை நிறுவனத்தினர் 2.8 கிலோ (350 பவுன்) தங்கத்தை கொடுத்து பல்வேறு மாடல்களில் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். அவரும் பல்வேறு மாடல்களில் 350 பவுன் நகைகளை டிசைன் செய்து அதனை டெலிவரி செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த மாதம் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கிக்சன் ஏறினார். ஆனால் முன்பதிவு இல்லா டிக்கெட் வைத்து கொண்டு எஸ்-1 பெட்டியில் ஏறி பயணம் செய்ததார்.

பின்னர் அவர் ரெயிலில் தனது இருக்கை அருகில் நகை இருந்த பையை வைத்துவிட்டு படுத்து தூங்கிவிட்டார். அந்த ரெயில் சேலம் ரெயில் நிலையம் வந்தபோது, 350 பவுன் நகைகள் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கிக்சன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்தகொள்ளையில் துப்பு துலக்க ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நகை வியாபாரி கிக்சன் ரெயிலில் ஏறியதில் இருந்து அவரை பின் தொடர்ந்து கொள்ளையர்கள் வந்தார்களா? என ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் இருக்கும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்காக ஒரு தனிப்படையினர் திருச்சூர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் வந்து நின்றபோது, அதில் இருந்து இறங்கி சென்ற நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வட மாநில கொள்ளையர்கள் இந்த நகை கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என ரெயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் பழைய வட மாநில கொள்ளையர்களின் பட்டியலை எடுத்து அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story