காரில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சா பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள்
ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளாவுக்கு ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரெயில்களில் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், ஏட்டுக்கள் ரோஜா ரமணன், சரவணன் ஆகியோர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி சுங்கச்சாவடி பகுதிக்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள பதிவு எண் கொண்ட 2 கார்கள் வேகமாக வந்தது. பின்னர் அந்த கார்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது, காரில் இருந்து ஒருவர் தப்பிஓட்டம் பிடித்தார்.
அவர்கள் வந்த கார்களில் சோதனை செய்தபோது, அதற்குள் 55 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கார்களுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கார்களில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஷிஜூப் (வயது 32), ஜாபர் (36), சையத் உவைரன் (27), நவ்பால் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் கார்களில் ஆந்திராவில் இருந்து 55 கிலோ கஞ்சாவை கடத்தி எர்ணாகுளத்தில் சப்ளை செய்ய கொண்டு சென்றதும், இந்த கஞ்சா கும்பல் தலைவனாக ஷிஜூப் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.