வேலூர் அருகேவாளி தண்ணீரில் மூழ்கி 14மாத குழந்தை பலி
கோப்பு படம்
வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துர்க்கா. இந்த தம்பதிக்கு 14 மாதமே ஆன சகிதா என்ற பெண் குழந்தை இருந்தது. துர்க்கா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை சகிதா அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் கையை விட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை தலைக்குப்புற அந்த வாளியில் விழுந்து மூழ்கியது.
குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகமடைந்த தாய் துர்க்கா வெளியே வந்து பார்த்தார். அப்போது குழந்தையை காணவில்லை.அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால், பதறிப்போன துர்க்கா குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது, குழந்தை சகிதா, வாளிக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி மூச்சு, பேச்சின்றி கிடந்தாள். உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று கூறினர்.
இதுகுறித்து துர்க்கா கொடுத்த புகாரின்பேரில், வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.