பூட்டிய வீடுகளை உடைத்து கைவரிசை - டிப்டாப் கொள்ளையன் கைது
பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் இரு சக்கர வாகனத்தி்ல் நோட்டமிட்டு, இரவு நேரத்தில் சத்தமின்றி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி வந்த ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த டிப் டாப் கொள்ளையனான ராயப்பாடி வெங்கய்யா (47) என்ற கொள்ளையனை கைது செய்து, சுமார் 81 பவுன் தங்க நகைகள், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்திருக்கிறது தர்மபுரி காவல்துறை.
தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீடுகள் உடைக்கப்பட்டு சுமார் 83 3/4 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் வந்தது.. இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தனிப்படைகள் அமைத்து களத்தில் இறங்கியது தர்மபுரி காவல்துறை. கொள்ளை நடந்த இடம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து சிசிடிவிக்களின் பதிவுகளை ஆராய்ந்து போது கொள்ளையன் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்பாடி வெங்கய்யா என்பதை கண்டுபிடித்து, குண்டூர் விரைந்தது தருமபுரி தனிப்படை போலீஸ்.
வெங்கய்யா தலைமறைவாகியிருப்பதை உறுதி செய்த போலீசார் அவரது செல்போன் சிக்னல் நடமாட்டத்தை கண்காணித்தபோது, கொள்ளையன் வெங்கய்யா இரு சக்கர வாகனம் ஒன்றில் மீண்டும் தர்மபுரி கல்குளம் வந்திருப்பதை கண்டுபிடித்து சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
டிப்டாப் கொள்ளையன் வெங்கய்யா ஏற்கனவே கொள்ளையடித்திருந்த தங்க நகைகளை கார் ஒன்றில் பதுக்கி வைத்து அந்த காரினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டு விடாதபடி டிப்டாப் உடையுடன் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்றில் ஹெல்மட் அணிந்தபடி தர்மபுரிக்கு வந்து கொள்ளை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தங்க நகைகள் பதுக்கியிருந்த கார், இரு சக்கர வாகனம், கொள்ளையடிக்கப்பட்ட 81 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தது.. கொள்ளையன் வெங்கய்யா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மூன்று மாநிலங்களில் ஏற்கனவே கைவரிசை காட்டியிருப்பதும், ஆந்திரா, தெலுங்கானாவில் கொலை வழக்குகள் பதிவாகியிருப்பதும், தமிழகத்தில் வேலூர் மற்றும் திண்டுக்கல்லில் வீடுகளை உடைத்தும், கண்ணக்கோல் வைத்து திருட்டில் ஈடுபட்டு, கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்திருக்கும் விபரங்களையும் கண்டறிந்தது காவல்துறை.
தனது குடும்பத்தாரோடு வீட்டில் தங்காமல் ஆங்காங்கே தனி அறைகள் எடுத்து தங்கி அங்கிருந்து சென்று கைவரிசை காட்டி வந்ததும், கொள்ளைக்கு போகும் முன் கோவிலுக்கு சென்று முதலில் சாமியை கும்பிட்டு விட்டு அதன் பிறகே கொள்ளயைடிக்க செல்வதும், கொள்ளை வெற்றிகரமாக நிறைவேறிய பிறகு மீண்டும் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வணங்கிவிட்டே அங்கிருந்து தப்பி செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளான் கொள்ளயைன் வெங்கய்யா.
கொள்ளையடிக்கபட்ட தங்க நகைகளை உருக்கி விற்று விட்டு அதில் கிடைக்கும் பணத்தி்ல் உல்லாசமாக வாழ்ந்திருப்பதும் காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.கைதாகியுள்ள டிப்டாப் கொள்ளையன் வெங்கய்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை திட்டமிட்டிருக்கிறது.