டி.வி பார்ப்பதில் தகராறு - அண்ணன் மகனை வெட்டிக்கொன்றவர் கைது
கொலையாளி மோகன்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் ரயில்வே கேட் பகுதியில் வசிப்பவர் அன்பரசு. இவரது 11 வயது மகன் பாரதி. கரூரை அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக அருகிலுள்ள செம்படாபாளையம் செந்தூர் நகரில் உள்ள தனது தாத்தா பொன்னுச்சாமி வீட்டிற்கு தாத்தாவுடன் நேற்று முன்தினம் வந்துள்ளான். நேற்று மாலை 6 மணியளவில் சிறுவனின் தாத்தா, பாட்டி அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுவன் பாரதியும், அவனது சித்தப்பா மோகன்ராஜ் என்கிற கோகன் 40 இருவரும் வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சிறுவன் தனது சித்தப்பாவை கெட்ட வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோகன்ராஜ் கோபத்தின் உச்சத்துக்கு சென்றதால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிறுவனின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். சிறுவனின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டினுள் வந்து பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் சிறுவனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம் பாளையம் காவல்துறையினர், பொதுமக்கள் கொலையாளியை பிடித்து கட்டி வைத்திருந்த மோகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோகன்ராஜ் ஏற்கனவே கொலை குற்றம் செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 1 வருடத்திற்கு முன்பு வெளியில் வந்த நிலையில், மீண்டும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 11 வயது பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.