ஐ.டி அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி - தனியார் வங்கி மாஜி மேலாளர் கைது

ஐ.டி அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி - தனியார் வங்கி மாஜி மேலாளர் கைது

ராஜ்குமார்

தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஐடி நிறுவன மேலாளரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த தனியார் வங்கியின் முன்னாள் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ், 44. பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவரும், சென்னை தி.நகர் கிளை ஆக்ஸிஸ் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தவருமான ராஜ்குமார், 38, என்பவர் அறிமுகம் ஆனார்.

எச்.டி.எப்.சி., உள்ளிட்ட பல தனியார் வங்கிகளிலும் ராஜ்குமார் வேலை பார்த்துள்ளார். அவர், 'பி.எம்.எஸ். என்ற நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால், அதிக லாபம் கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் முதலீட்டு பணத்தை திரும்ப பெறலாம்' எனவும், கிரிபிரசாத் ராவிடம் கூறினார். இதையடுத்து கிரிபிரசாத்ராவ் 2021 முதல் 2023ம் ஆண்டு வரை, 1.13 கோடி ரூபாயை ராஜ்குமாருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தேவை ஏற்பட்டு, பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், ராஜ்குமார் பணத்தை திருப்பி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். திடீரென தலைமறைவானார். இதையடுத்து அவர் வங்கி பணியிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளதாக, கிரிபிரசாத் ராவுக்கு தெரிந்தது.இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூனில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கிரிபிரசாத்ராவ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருவேற்காடில் உள்ள வீட்டிற்கு ராஜ்குமார் நேற்று முன்தினம் வந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். விசாரணையில், பலரிடம் 4 கோடி ரூபாய் வரை ராஜ்குமார் மோசடி செய்துள்ளதும் தெரியவந்து உள்ளது.

Tags

Next Story