நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் - டிக்கெட் பரிசோதகர் தப்பி ஓட்டம்
பாலியல் தொல்லை
கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பனஸ்வாடியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். இவர் கேரளாவுக்கு பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயில் சேலம் நோக்கி வந்த போது முன்பதிவு பெட்டியில் இருந்த அந்த மாணவியிடம் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டார். அதற்கு அந்த மாணவி நான் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்திருந்தேன். ரெயில் வந்ததால் அவசரமாக இந்த பெட்டியில் ஏறி விட்டேன். அடுத்த நிறுத்தம் வந்தவுடன் முன்பதிவு இல்லாத பெட்டிக்கு சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஏசி பெட்டிக்கு சென்றுள்ளார். அங்கு பயணிகள் இல்லாத பகுதியில் வைத்து அந்த பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மாணவி சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். அதற்குள் ரெயில் சேலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் திரண்டு வந்ததால் டிக்கெட் பரிசோதகர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து நர்சிங் மாணவி சேலம் ரெயில் நிலையத்தில் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியின் புகாரின் பேரில் தப்பி ஓடிய டிக்கெட் பரிசோதகர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.