கடனை திருப்பி தராமல் மிரட்டும் பெண் காவலர் - எஸ்பியிடம் புகார்
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி வட்டதுக்கு உட்பட்ட லளிகம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர், எஸ்பி அலுவலகத்தில் போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,தர்மபுரி சரகத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர், தனியார் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கி அவரது வீட்டை பூட்டி தன் கைவசம் வைத்துக் கொண்டது.
இந்நிலையில் அந்த பெண் காவலர் தரகர் ஒருவர் மூலம் என்னிடம் கடந்த ஜனவரி 27ம் தேதி, 3 லட்சத்து 2ஆயிரத்து 500 கடனாக வாங்கினார். பணம் பெற்று 6 மாதமாகியும், பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, தர மறுத்து மிரட்டல் விடுக்கிறார். எனவே, எனது பணத்தை அவரிடம் இருந்து பெற்று தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தர்மபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சாந்த மூர்த்தி எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தர்மபுரி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற் றும் பெண் காவலர், தரகர் ஒருவர் மூலம் வங்கி கடன் கட்ட முடியாமல், ஏலத்திற்கு வந்த தனது வீட்டை, என்னிடம் 40 லட்சத்திற்கு விலை பேசினார். அதற்காக 30 லட்சம் முன்பணமாக, வங்கி மூலம் அந்த பெண் காவலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளேன். பணத்தை பெற்ற பெண் காவலர், வங்கி கடனை அடைத்து விட்டு, வீட்டை எனக்கு கிரையம் செய்து தர மறுத்து, மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவரிடம் இருந்து, நான் கொடுத்த 30 லட்சத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ அங்கப்பன், எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், 'தர்மபுரி சரகத் தில் பணியாற்றும் பெண் காவலர், சொந்த வீடு வாங்குவதற்காக 5 லட்சம் கடனாக கேட்டார். நானும் ஓய்வு பெற்ற பணத்தில் இருந்து,கடந்த 16.4.2023ல் வங்கி மூலம், அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். ஆனால், வாங்கிய கடனுக்கு வட் டியும் அசலும் தரவில்லை. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார். 3 பேரும் ஒரே பெண் காவலர் மீதுதான் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.