சமையல் பணியாளர் கொலை - மற்றொரு சமையல் பணியாளர் கைது

குமாரபாளையத்தில் கடன் தொல்லை தாங்க முடியாமல் சக பெண் சமையல் பணியாளரை கொன்று நகைகளை திருடிய மற்றொரு பெண் சமையல் பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் தெரு அரசு பள்ளியில் சமையல் பணியாளராக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரி, 55. இவர் நவ. 20ல் தன்னுடன் பணியாற்றும் கவுரி காஞ்சனா என்பவர் வசம், வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர், திரும்ப வரவில்லை. இது குறித்து இவரது மகள் கவிதா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இரு நாட்களில் இதே பள்ளியில் சமையல் வேலை செய்யும் கவுரி காஞ்சனா, 37, மற்றும் 14,13 வயதுள்ள இரண்டு மகள்கள், 7 வயது மகனுடன் மாயமானார். இது குறித்து இவரது தந்தை முருகன், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். சுமார் ஒரு மாதம் ஆகியும் இவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாமல் இருந்தது. போலீசார் செய்த தீவிர விசாரணையில், மாதேஸ்வரி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் புத்தர் தெரு அரசு பள்ளியில் சமையல் பணியாளராக பணியாற்றி வந்தவர்கள் தம்மண்ணன் சாலையில் வசிக்கும் மாதேஸ்வரி, 42, தெற்கு காலனியில் வசிக்கும் கவுரி காஞ்சனா, 35. மாதேஸ்வரிக்கு ஒரு மகள். கவுரி காஞ்சனாவிற்கு இரு மகள்கள், ஒரு மகன். மாதேஸ்வரி நவ. 20ல் காணாமல் போனதாக இவரது மகள் புகார் கொடுத்தார். அடுத்த இரு நாட்களில் கவுரி காஞ்சனா, இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் காணாமல் போனதாக, அவரது தந்தை புகார் கொடுத்தார்.

இது குறித்து ஒரு மாதம் விசாரணை செய்தும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து கவுரி காஞ்சனா, குமாரபாளையம் வி.ஏ.ஒ. முருகனிடம் சரணடைந்து, மதேஸ்வரியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இந்த தகவலை வி.ஏ.ஓ. முருகன் போலீசிடம் தெரிவிக்க, கவுரி காஞ்சனாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டோம். குடும்ப சூழ்நிலைக்காக அதிக இடங்களில் அதிக கடன் பெற்று, வட்டி கூட செலுத்த முடியாத நிலைக்கு காஞ்சனா தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பணத்தட்டுபாடு அதிகம் ஆனதால், கூட வேலை செய்யும் மாதேஸ்வரியை, அவர் அணிந்திருக்கும் நகைக்கு ஆசைப்பட்டு நவ. 20ல் பள்ளி சத்துணவு சமையல் கூடத்தில், கீழே தள்ளி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மாதேஸ்வரி அணிந்திருந்த 13 கிராம் நகை ரூபாய் 45 ஆயிரம் மதிப்பிலானது. சடலத்தை பவானி காளிங்கராயன் வாய்க்காலில் போட்டதாக கவுரி காஞ்சனா கூறியதால், வாய்க்காலில் தேடி பார்த்தும், சடலம் கிடைக்கவில்லை. கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் கவுரி காஞ்சனா கைது செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். திருடப்பட்ட நகை 13 கிராம் போலீசாரால் மீட்கப்பட்டது.



Tags

Next Story