பட்டப்பகலில் துணிகரம் - 65 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி திருட்டு

பட்டப்பகலில் துணிகரம் -  65 பவுன் தங்கம், 1 கிலோ வெள்ளி திருட்டு

திருட்டு நடந்த வீடு 

சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் சின்னசாமி மகன் முனியசாமி என்கிற சேகர்.53. இவர் அரசு மருத்துவமனை சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சேகர் காலையில் கடைக்கு வந்து விட்ட நிலையில் அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையலை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார். தொடர்ந்து சேகர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பூஜை ரூமில் இருந்த 65 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக தொடர் திருட்டுகள் அரங்கேறி வரும் நிலையில் இரவு ரோந்துகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரி விடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவம் நடந்தேறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags

Next Story