பெண் குழந்தை உயிரிழப்பு - காதல் ஜோடியிடம் விசாரணை

பெண் குழந்தை உயிரிழப்பு - காதல் ஜோடியிடம் விசாரணை

பைல் படம் 

பூந்தமல்லியில் குப்பையில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக, குழந்தைக்கு உரிமை கோரிய காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி, ராமானுஜ கூட தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி விடுதி வளாகத்தில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் பிறந்து 2 நாட்களான பெண் குழந்தை உடலில் எறும்புகள் மொய்த்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. மீட்கப்பட்ட அந்த குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

குழந்தைக்கு அதிர்ஷ்ட லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்ணும் அவரது காதலனும் குழந்தையை தாங்கள்தான் அங்கு போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறி, முன்ஜாமீனுடன் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து விசாரிக்குமாறு பூந்தமல்லி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது இறந்துபோன குழந்தையின் டிஎன்ஏவை பரிசோதனை செய்த பிறகு, நீதிமன்றத்தில் சரணடைந்த காதல் ஜோடியின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது முடிவு செய்யப்படும். அதன் பிறகு அந்த காதல் ஜோடியின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என பூந்தமல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story