ஜெயிலருக்கு கொலை மிரட்டல் - 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு!
மத்திய சிறை (பைல் படம்)
வேலூர் தொரப்பாடியில் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நன்னடத்தையின் அடிப்படையில் ‘பிளாக்’ வாரியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5-வது பிளாக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாண்டி, அம்மு என்கிற வெங்கடேசன், காஞ்சீபுரத்தை சேர்ந்த செங்குட்டுவன் என்கிற வெங்கடேசன் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அம்மு என்கிற வெங்கடேசன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும், மற்ற இருவர் கொலை வழக்கில் விசாரணை கைதியாகவும் உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து பிற கைதிகளுக்கு தொந்தரவு கொடுப்பது, கலாட்டாவில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறை நிர்வாகம் 3 பேரையும் வெவ்வேறு பிளாக்களுக்கு மாற்ற முடிவு செய்தது. இதனை அறிந்த அவர்கள் ரோந்து சென்ற ஜெயிலர் அருள்குமரனிடம், தங்களை வேறு, வேறு பிளாக்கிற்கு மாற்றுவது சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஜெயிலர் மற்றும் காவலர்கள் அவர்களிடம் பிற கைதிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.
ஆனால் ஆத்திரமடைந்த 3 கைதிகளும் ஜெயிலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெயிலர் அருள்குமரன் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாண்டி, வெங்கடேசன் செங்குட்டுவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.