லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் கைது

கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி , துணை தாசில்தார் பழனியப்பன்,

பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க மேலாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துணை தாசில்தார் தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருமணமண்டபத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெற பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் துரைராஜ் விண்ணப்பித்தார். அப்போது தடையின்மை சான்று வழங்குவ தற்கு துரைராஜிடம் துணை தாசில்தார் பழனியப்பன் , ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைராஜ் இது குறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை பழனியப்பனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறி வுறுத்தினர். அதன்படி துரை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்டலஞ்ச ஒழிப்பு பிரிவுதுணைபோலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு துரைராஜ் லஞ்ச பணத்தை பழனியப்பனிடம் கொடுக்க முயன்றார். அப்போது பழனியப்பன்,அலுவலகத்தில் இருந்த கீழக்கரை கிராம நிர்வாக அலுவலர் நல்லுச்சாமியை லஞ்ச பணத்தை வாங்கி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து நல்லுச்சாமி துரைராஜிடம் இருந்து பணத்தை வாங்கி, பழனியப்பன் வைக்க கூறிய இடத்துக்கு கொண்டு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று நல்லுச்சாமியையும், பழனியப்பனையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் துணை தாசில்தார் பழனியப்பன் நெஞ்சுவலிப்பதாககூறினார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில். சிகிச்சையில் இருந்த துணை தாசில்தார் பழனியப்பன் மாயமானார். இதனைத் தொடர்ந்து தலைமறைவான, துணை தாசில்தார் பழனியப்பனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தசம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story