மாமல்லபுரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: போலீசார் வலைவீச்சு
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 50. அவரது மனைவி துளசி, 42. இவர்கள் இருவரும், சுற்றுப்புறப்பகுதி மற்றும் சென்னையைச் சேர்ந்த பெண்களிடம், தங்களிடம் பணம் கொடுத்தால், அதை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர். சென்னை, நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த சுதாகர் மனைவி நித்தியா, 38, என்பவர், தன் தங்கை மைதிலி மூலம், கடந்த 2021ல், 25 பெண்களிடம், 5 கோடி ரூபாய் வரை வசூலித்து, ராஜா - துளசி தம்பதியிடம் அளித்துள்ளார். அதோடு, தம்பதி இருவரும் தீபாவளி சீட்டும் நடத்தி, பணம் வசூலித்து வந்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி, அசல், இரட்டிப்பு பணம், தீபாவளிச் சீட்டு பணம் ஆகியவற்றை மீண்டும் அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். பணத்தை திருப்பிக் கேட்டவர்களை, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளனர்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர்கள், ராஜாவின் வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டப்பட்டு தம்பதி தலைமறைவானது தெரிந்தது.
இதையடுத்து, நித்தியா, நேற்று முன்தினம், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மறைவிடத்தில் பதுங்கியிருந்த ராஜாவை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள துளசியை போலீசார் தேடி வருகின்றனர்.