தஞ்சாவூரில் திமுக தொழிலதிபர் வெட்டிக் கொலை
கொலை செய்யப்பட்டவர்
தஞ்சாவூரில், திருவாரூர் மாவட்டச் சேர்ந்த திமுக தொழிலதிபர் மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் கே.பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.
இவர் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலாவுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு முற்பகல் வந்தார். தஞ்சாவூர் ஞானம் நகருக்கு வந்தபோது, பாலா அப்பகுதியிலுள்ள கடையில் மொய் கவரை வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.
அப்போது எதிரே வந்த கார் இவர்களது காரை வழி மறித்து நிறுத்தி ஒலிப்பானை மிகுந்த சப்தத்துடன் எழுப்பியது. இதனால், காரை விட்டு இறங்கி வந்து கேட்ட பாபுவை எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனால் பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன், துணைக் கண்காணிப்பாளர்கள் நித்யா (வல்லம்), பி.என். ராஜா (தஞ்சாவூர் நகரம்) உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தொழில் போட்டி காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்தது தெரிய வந்தது.
இதன் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.