திமுக முன்னாள் நிர்வாகியை 2 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

திமுக முன்னாள் நிர்வாகியை 2 நாள்  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
 முன்னாள் திமுக நிர்வாகி ரமேஷ் பாபு 
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் கைதான திமுக முன்னாள் நிர்வாகியை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க இரணியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பாதிரியார் இல்லத்திற்குள் கடந்த 20ந் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசு போக்குவரத்து கழக ஊழியருமான சேவியர் குமார் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

5 தனிப்படையினர் அவர்களை தேடி வந்த நிலையில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. தக்கலை ஒன்றிய முன்னாள் செயலாளரும், இரணியல் அரசு வழக்கறிஞருமான ரமேஷ்பாபு கடந்த 29ம் தேதி நாகை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நேற்று இரணியல் நீதிமன்றத்தில் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். ரமேஷ்பாபுவை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீஸார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து ரமேஷ்பாபுவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ரமேஷ்பாபுவை போலீஸார் இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் சேவியர் குமார் கொலை தொடர்பாக விசாரித்து ஆதாரங்களை திரட்ட போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் 2-ம் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பாதிரியார் ராபின்சனை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து, பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

Tags

Next Story