போதை மாத்திரை விற்பனை : 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போதை மாத்திரை விற்பனை : 6 பேர்  குண்டர் சட்டத்தில் கைது

பைல் படம் 

பரமத்தி வேலூர் அருகே கடந்த மாதம் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைதான 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மாதம் 17- ஆம் தேதி தனிப்படை போலீசார் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள நீரோற்று பாசன பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்த பணத்தை வைத்து பிரித்துக் கொண்டு இருந்த போது அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதை மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அப்போது அவர்களிடம் இருந்து 10 போதை மாத்திரைகள், 10 போதை ஊசிகள், ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கூடச்சேரியை சேர்ந்த மணி என்பவரது மகன் சிதம்பரம் (27), தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பசுபதி(24), வேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் கார்த்திகேயன் (21), பொத்தனூர், காமராஜர் நகரை சேர்ந்த கோபிநாத் என்பவரது மகன் நித்திஷ்(24), பொத்தனூர் நல்லாயிகாட்டு தெருவைச் சேர்ந்த சலீம் பாட்ஷா என்பவரது மகன் முகமது உசேன் (24), பொத்தனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது கோகுல்ராஜ் (20), வேலூர் மீனவர் தெருவை சேர்ந்த மைசூரான் என்பவரது மகன் செல்வம் (23) ஆகிய 7 பேரையும் கைது செய்து தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில்‌ சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பரமத்தி வேலூர், தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பசுபதி மற்றும் மேலப்பட்டியை சேர்ந்த சிதம்பரம் ஆகிய இருவரும் பரமத்திவேலூர் பகுதியில் போலியாக மெடிக்கல் நடத்தி வருவதாகவும், அந்த மெடிக்கலுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்யலாம் என போலி மருத்துவ சான்றிதழ்க போலி மருத்துவ சான்றிதழ்களை தயார் செய்து நாக்பூரில் உள்ள ஒரு மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பி அங்கிருந்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகள், போதை ஊசிகளை ஆன்லைன் மூலம் ஒரு மாத்திரை ரூ.30- க்கு வாங்கி பரமத்திவேலுார் வட்டாரத்தில் மாத்திரை ஒன்று ரூ.900 த்திற்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேர்களும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உத்தரவின் படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரையின் பேரில் பரமத்திவேலுார் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் கூடச்சேரியை சேர்ந்த சிதம்பரம் (27), தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பசுபதி(24), வேலூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (21), பொத்தனூர் நல்லாயிகாட்டு தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (24), பொத்தனூர் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (20), வேலூர் மீனவர் தெருவை சேர்ந்த செல்வம் (23) ஆகிய 6 பேர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story