குடிபோதையில் கர்ப்பிணி காதல் மனைவியை தாக்கி கொலை – கணவன் கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி ஆலமரத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 23. கூலித் தொழில் செய்து வருகிறார். ராசிபுரம் அடுத்த பூமத்தன்பட்டி பகுதியில் கூலி வேலை செய்து கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 22 என்பவருக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2022 ல் திருமணம் செய்து கொண்டனர். ஹரிஹரனுடன் வசிக்கும் லட்சுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், உன்னை எனக்கு பிடிக்கவில்லை உன் வீட்டிற்கு போ எனக் கூறி குடிபோதையில் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி லட்சுமியின் தாயான பெருமாயி, 45. ஹரிஹரனின் தாயான விஜயா போன் செய்து லட்சுமி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் இடது பக்க தலையில் பலத்த அடிபட்டு, சிசிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஹரிஹரனின் சொந்த ஊரில் பெருமாயி விசாரிக்கும் போது, சம்பவத்தன்று உன்னை பிடிக்கவில்லை, உங்க வீட்டிற்கு போ என்றால் போக மாட்டியா, உன்னை அடித்துக் கொன்றதால் தான் எனக்கு நிம்மதி எனக் கூறி 4 மாத கர்ப்பிணியான லட்சுமியின் தலைமுடியை பிடித்து வீட்டின் சுவற்றில் பலமாக இடித்ததில் இடது பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து பெருமாயி ஆயில்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தநிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 மாதக் கர்ப்பிணி காதல் மனைவியை குடிபோதையில் கொடூரமாக தாக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.