ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு
பைல் படம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 54). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 14-ந் தேதி தனது காரில் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள ஒரு நிலத்தை வாங்குவதற்காக சென்றார். காரை கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றார். இதையடுத்து சில காரணங்களால் மூர்த்தி அத்திப்பள்ளியில் நிலத்தை வாங்கவில்லை.
தொடர்ந்து அவர் காரில் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பாலம் அருகே கார் வந்தபோது, பின் தொடர்ந்து 3 கார்களில் வேகமாக வந்தவர்கள் மூர்த்தியின் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் கார்களில் இருந்து திபுதிபுவென இறங்கிய 7 பேர் மூர்த்தியை தாக்கியதுடன், கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த மூர்த்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்தார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர்கள் மனோன்மணி, நெப்போலியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 கார்களில் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை மறித்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.