போலி பாஸ்போர்ட் விவகாரம் - காவல் நிலைய எழுத்தர் சஸ்பெண்ட்

போலி பாஸ்போர்ட் விவகாரம் - காவல் நிலைய எழுத்தர் சஸ்பெண்ட்
சேதுபாவாசத்திரம் காவல் நிலையம்
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உறுதுணையாக இருந்த சேதுபாவாசத்திரம் காவல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கமும், தனிப்பிரிவு தலைமைக் காவலர் பணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சாவூர் மாவட்ட க்யூ ப்ராஞ்ச் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து க்யூ ப்ராஞ்ச் பிரிவினர் ரகசிய விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில், கிராம தபால்காரராக பணியாற்றிய கோவிந்தராஜ் (64), கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல் (52), ராஜூ (31), ராஜாமடத்தை சேர்ந்த சங்கர் (42), சேதுபாவாசத்திரம் காவல் நிலைய தற்காலிக கணினி ஆப்ரேட்டர் பாலசிங்கம் (36), திருச்சி கல்காண்டார்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் (52) ஆகிய 6 பேரையும் கடந்த 13 ஆம் தேதி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மல்லிப்பட்டினம் கிராம முன்னாள் தபால்காரர் பக்ரூதீன், திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சுந்தர்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சேஷா என்கிற எழுத்தர் பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறியும், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாக கூறி அவரை பணிஇடைநீக்கம் செய்தும், அந்த காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலாக பணியாற்றிய சச்சிதானந்தம் என்பவரை அந்த பணியிலிருந்து விடுவித்தும் மாவட்ட காவல் கண்காகணிப்பாளர் ஆஷீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், மல்லிப்பட்டினம் கிராம அஞ்சலகம் மூலம் போலி ஆவணங்கள் மூலம், போலியான முகவரியில், இலங்கைத் தமிழர்களுக்கு 20 பாஸ்போர்ட்டுகள் பெறப்பட்டுள்ள தகவல் குறித்து கியூ ப்ராஞ்ச் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story