சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி அரசு டாக்டரிடம் ரூ.36 லட்சம் மோசடி

சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி  அரசு டாக்டரிடம் ரூ.36 லட்சம் மோசடி

சைபர் கிரைம் (பைல் படம்)

சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி சேலம் அரசு மருத்துவரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த மே மாதம் 10-ந் தேதி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர் தான் சி.பி.ஐ. அதிகாரி என கூறினார். மேலும் அவர் அந்த டாக்டரிடம் உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிதாக சிம் கார்டு ஒன்று பெறப்பட்டுள்ளது. அந்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி ஆள் கடத்தல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே உங்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இதற்காக வங்கி கணக்கில் உள்ள பணத்தை நான் தெரிவிக்கும் வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும். பின்னர் அதனை சரிபார்த்துவிட்டு திரும்ப உங்கள் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி விடுகிறோம் என்றார். இதை உண்மை என நம்பிய அந்த டாக்டர் 3 தவணைகளாக ரூ.36 லட்சத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவருக்கு அந்த பணம் திருப்பி கிடைக்கவில்லை. மேலும் மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணும் சுவிட்ச்-ஆப் என வந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தன்னிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தது டாக்டருக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story