நீதிமன்ற முன்னாள் ஊழியரின் சொத்துகள் முடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தினகராஜா(61). பட்டுக்கோட்டையில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 2020 ம் ஆண்டு நீதிமன்ற ஆவணங்களை தணிக்கை செய்தபோது அலுவலக ஆவணங்களின்படி 2018 - 2019ம் ஆண்டில் (26.12.2018 முதல் 25.10.2019 வரை) தினகராஜா, மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையில் ரூ.1 கோடியே 9 லட்சத்து 55 ஆயிரத்து 123 ஐ கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த தங்கவேல் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் நீதிமன்ற ஊழியராக இருந்த சித்ரா அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 2020 ம் ஆண்டு தினகராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வந்தன. இவ்வழக்கு கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி கையொப்பமிட்ட போலியான காசோலைகளில் அவர் தனது சொந்த வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதமாக காசோலைகளை டெபாசிட் செய்தது முறைகேடு செய்ததை உறுதி செய்தனர்.
மேலும் முறைகேடான பணத்தில், தனது மனைவி மணிமொழி பெயரில் பட்டுக்கோட்டையில் ரூ.44 லட்சத்தில் தரைத்தளத்துடன் கூடிய வீடு வாங்கியதாகவும், அதில் முதல் தளம் கட்ட ரூ.31 லட்சத்தை செலவழித்தும், ரூ.18 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியதாகவும், மகன் பெயரில் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சம், வீட்டிலிருந்த ரூ.20.50 லட்சம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறையால் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், தினகராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.1.15 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கியுள்ளது.