தப்பி ஓடிய வழிப்பறி கும்பல் - 35 கி.மீ துரத்தி பிடித்த நாகை எஸ்பி

கரூர் மாவட்டத்தில் வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளை வேளாங்கண்ணியில் போலீசார் பிடிக்க சென்றபோது தப்பி ஓடிநிலையில் நாகை எஸ்பி ஹர்ஷ் சிங் தலைமையில் போலீசார் 35 கிலோமீட்டர் தூரம் விரட்டி 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.

கரூர் மாவட்டத்தில் வழிப்பறி தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தோடப்பட்டு வந்த குற்றவாளிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கி இருப்பதாக எஸ்பி ஹர்ஷ்சிங்கிற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நாகப்பட்டினம் எஸ்பி ஹர்ஷ் சிங் தலைமையில் தனிப்படை போலீசார், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 1 மற்றும் 2, அதி விரைவுபடை காவல்துறையினர் என 4 பிரிவுகளாக பிரிந்து குற்றவாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

இதை அறிந்த குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த டாடா சுமோ வாகனத்தில் ஏறி தப்பினர். இதை அறிந்த எஸ்பி மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அருகில் உள்ள மாவட்டத்தின் எஸ்பி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார். சினிமா பட பாணியில் எஸ்பி தலைமையிலான தனிப்படை வேளாங்கண்ணியில் இருந்து 35 கிலோமீட்டர் விரட்டி சென்றனர். திருவாரூர் மாவட்ட எல்லையில் சென்ற போது திருவாரூர் மாவட்ட காவல் துறையின் உதவியுடன் டாடா சுமோ மடக்கி பிடிக்கப்பட்டது.அப்போது அதில் தப்பிக்க முயன்ற 5 பேரை நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த கண்ணன்(23), பக்ருதீன் (33), பாண்டியன் (31), சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் (30) தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ் (33) என்பது தெரிய வந்தது. இவர்கள் கும்பலாக சென்று பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை, வழிபறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த 5 பேரும் திருவாரூர் மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின் கரூர் மாவட்ட காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர். முன்னெச்செரிக்கையுடனும், சிறப்புடனும் செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினரை எஸ்பி ஹர்ஷ்சிங் பாராட்டினார்.

Tags

Next Story