கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம் | crime |கிங் நியூஸ் 24x7

கேரளா கொலை வழக்கு
காதலன் ஷரோன் ராஜிக்கு கசாயம் மற்றும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்தது கேரள நீதிமன்றம் மரணிக்கும் தருவாயிலும் தனது காதலி தண்டிக்கப்படக்கூடாது என கூறியுள்ளார் ஷரோன் ராஜ்; ஆனால் மிகவும் கொடூரமான இதயமே இல்லாத வகையில் காதலி கிரீஷ்மா நடந்து கொண்டுள்ளார் - நீதிமன்றம்
நாட்டையே உலுக்கிய ஷாரோன் ராஜ் என்ற இளைஞரை காதலி கிரீஷ்மா ஜூஸ் மற்றும் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த விவகாரத்தில் கிரிஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட, அரசு தரப்பின் இறுதி வாதம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தமிழக எல்லையான கன்னியாகுமரியை ஒட்டி உள்ள கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகன் மரணத்தில் அவரது காதலி கிரீஷ்மா மீது சந்தேகம் தெரிவித்து ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜுக்கு, அவரது காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.