கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு - திருச்சியில் சிபிசிஐடி ஆய்வு

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு -  திருச்சியில்  சிபிசிஐடி  ஆய்வு

பைல் படம் 

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடா்பாக, திருச்சியில் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு மையங்களில் சிபிசிஐடி அதிகாரி மற்றும் குஜராத்தைச் சோ்ந்த வல்லுநா் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுதொடா்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாா், ஜெயலலிதாவிடம் காா் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த சயான், வாழையாறு மனோஜ் உள்ளிட்ட 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இவா்களில் கனகராஜ் சாலை விபத்தில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக தற்போது சிபிசிஐடி போலீஸாா் மறுவிசாரணை செய்து வருகின்றனா். இதற்காக சுமாா் 300-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்ட கேரள மாநிலத்தைச் சோ்ந்த சயானிடம் புதன்கிழமை நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனா். மேலும், கொடநாடு மலைப்பகுதி என்பதால், தொலைத் தொடா்புகளுக்கு பிஎஸ்என்எல் இணைப்புகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. கொலை-கொள்ளைச் சம்பவத்தில், சந்தேகத்துக்குள்ளான 60 பேரின் கைப்பேசி அழைப்புகள் மற்றும் 19 கோபுரங்கள் வாயிலாக கிடைத்த பதிவுகள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திருச்சி உள்ளிட்ட இடங்களிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பதிவுகள் அடங்கிய மென்பொருள்களை (டிஸ்குகளை) சோதித்த, குஜராத் காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வல்லுநா்கள், தொலைத்தொடா்பு நிலையங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தால் பிரதான சா்வரிலிருந்து கூடுதல் விரங்களைப் பெறமுடியும் எனக் கூறியுள்ளனா். இதன் அடிப்படையில், சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல், குஜராத் தடய அறிவியல் வல்லுநா்கள் மைஸ்ப்ரே, ஜாலா ஆகியோா் கொண்ட குழுவினா் திருச்சி வந்துள்ளனா்.

திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு மையத்தில் (எக்சேஞ்ச்) அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அங்கு சா்வரில் உள்ள விவரங்களையும் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த விவரங்களையும் ஒப்பிட்டு தகவல்களை சேகரித்து வருகின்றனா். மேலும், சந்தேகங்களுக்கு பொறியாளா்களிடமிருந்து விவரங்களையும் சேகரித்துள்ளனா்.

Tags

Next Story