கொடியாளம் பாமக ஊராட்சி மன்ற தலைவர் மணலை திருடி விற்பனை

கொடியாளம் பாமக ஊராட்சி மன்ற தலைவர் மணலை திருடி விற்பனை

ஆய்வு செய்யும் போலீசார்

கொடியாளம் பாமக ஊராட்சி மன்ற தலைவர் விவசாய நிலத்தை தோண்டி மணலை திருடி விற்பனை செய்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் அருகே கொடியாளம் ஊராட்சிமன்ற தலைவரான கோவிந்தராசு என்பவர் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது போல் நடித்து விவசாய நிலத்தை தோண்டி மணலை திருடி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று நள்ளிரவு பந்தநல்லூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் ஜாபர் சித்திக், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஜேசிபி எந்திரங்களை கொண்டு லாரி மற்றும் டிராக்டர்களில் மணலை கொள்ளையடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

போலீசார் மற்றும் அதிகாரிகளை கண்டவுடன் மணல் கொள்ளையர்கள் வயலுக்குள் புகுந்து தப்பி ஓடி உள்ளனர். இதையடுத்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய மூன்று ஜேசிபி மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய டிராக்டர்களை பறிமுதல் செய்ய விடாமல் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,

டிராக்டர்களை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு லாரி மற்றும் ஜேசிபியை மட்டும் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் அந்த கிராமத்தில் மேலும் மூன்று இடங்களில் விவசாய நிலத்தில் மணலை கொள்ளை அடித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கொடியாளம் ஊராட்சிமன்ற தலைவரான கோவிந்தராசு மீது பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் கொடியாளம் கிராமத்தில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் தான் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு வீடு வீடாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து கொடியாளம் கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தலைமுறைவாகியுள்ள ஊராட்சி மன்ற தலைவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story