குமரி எஸ் ஐ கொலை வழக்கு : நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம் (30), தவுபீக்(27), காஜா மொய்தீன் (53), மெகபூப் பாஷா (48), இஜாஸ் பாஷா (46), ஜாபர் அலி(26), சிக்காபுதீன்(36) ஆகிய 7 பேரை போலீஸôர் கைது செய்தனர்
. இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது ஏற்கெனவே பூந்தமல்லியில் உள்ள இந்த சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை 7 பேர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இதையடுத்து, தில்லி, பெங்களூரு, சேலம் ஆகிய சிறைகளிலிருந்து 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.