குமரி: தேவாலயங்கள், மசூதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகளை குறி வைத்து கடந்த இரு நாட்களாக மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குளச்சல் ஜும்மா பள்ளிவாசலுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதேபோல் கன்னியாகுமரி சின்னமூட்டம் பகுதியில் உள்ள ஆர். சி தேவாலயத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இது தொடர்பாக ஆலய நிர்வாகம், பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் குளச்சல், கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் உள்ள முஸ்லிம் ஜமாத்துக்கு சொந்தமான மசூதி, நாகர்கோவிலில் உள்ள பிரபல ரெண்டு பள்ளிவாசல்கள், கொட்டாரம், கன்னியாகுமரி, தென்தாமரைகுளம் பகுதியில் உள்ள தேவாலயங்களுக்கும் மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இந்த கடிதங்கள் அனைத்தும் டைப் செய்யப்பட்டு அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த சிலரின் பெயர்களில் அனுப்பபட்டுள்ளது. இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். மிரட்டல் கடிதம் தொடர்பாக கியூ பிராஞ்ச், எஸ்.ஐ.யு உள்ளிட்ட சிறப்பு உளவு பிரிவு போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.