மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை - சேலத்தில் பயங்கரம்

மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை -  சேலத்தில் பயங்கரம்

கொலை செய்யப்பட்ட தியாகு

சேலத்தில் மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் சூரமங்கலம் புதுரோடு அடுத்த பூனைகரடு பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவருடைய வீடு வாடகைக்கு விடபட்டிருந்த நிலையில் அய்யம்பெருமாளின் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடப்பதை பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலறிந்த அய்யம்பெருமாள் அங்கு சென்று பார்த்துவிட்டு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில், உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது. அவர் திருச்சி மாவட்டம், துறையூர் ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த உத்திரகுமார் மகன் தியாகு (24) என தெரியவந்துள்ளது. இவருக்கு பிரியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். தியாகு திருப்பூரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட நிலையில் சேலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story