நாகர்கோவில் காசி வழக்கு: மேலும் ஒருகுற்ற பத்திரிக்கை தாக்கல் 

நாகர்கோவில் காசி வழக்கு: மேலும் ஒருகுற்ற பத்திரிக்கை தாக்கல் 
நாகர்கோவில் காசி
பெண்களுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதாகி ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாகர்கோவில் காசி மீது இளம் பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் தங்க பாண்டியன் மகன் காசி (27). இளம்பெண்கள் மாணவிகளுடன் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்த பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவில் பெண் இன்ஜினியர் உள்ளிட்ட பலர் காசிக்கு எதிராக புகார் அளித்ததின் பேரில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காசியிடம் இருந்து 1900 ஆபாச புகைப்படங்களும், 410 ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 141 பெண்கள் வரை காசியால் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. காசி மீது கடந்த 2020 -ல் ஏழு வழக்குகளும், 2021 ஆம் ஆண்டு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதையும் சேர்த்து மொத்தம் ஐந்து வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. காசி வழக்கில், காசி தவிர அவரது நண்பர்கள் மூன்று பேரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். மேலும் காசியின் தந்தை தங்க பாண்டியனும் தடயங்களை அழித்ததாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story