பழிவாங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செய்த அதிர்ச்சி செயல்

பழிவாங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செய்த அதிர்ச்சி செயல்

மகாலிங்கம்

திருவள்ளூர் அருகே பழிக்கு பழியாக தன் காதை கடித்த ஆட்டோ ஓட்டுநரின் காதை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தண்ணீர்குளம் ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட சாலை, தரமானதாக இல்லை என கூறி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளன் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் இருவருக்கும் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம், ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் தயாளனின் இடது பக்க காதை கடித்துத் துப்பியுள்ளார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் தயாளனை மீட்டு உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்தநிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த மகாலிங்கம், அதன்பின் வழக்கம் போல் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளன் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து மகாலிங்கம் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்போது வீட்டிலிருந்த மகாலிங்கத்தின் தலை மற்றும் கைகளை அரிவாளால் வெட்டி, அவருடைய வலது பக்க காதை கத்தியால் அறுத்து துண்டித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த மகாலிங்கத்தின் மனைவி மற்றும் தந்தை மாரி அவர்களை தடுக்க முயற்சித்தபோது, அவர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த மகாலிங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தயாளனின் காதை கடித்து துப்பியதால், ஆத்திரத்தில் இருந்த அவர், மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் பழிக்குப் பழியாக அவருடைய காதை அறுத்தது தெரிய வந்துள்ளது. பழிக்கு பழியாக ஆட்டோ ஓட்டுநரை, வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ஊராட்சிமன்ற தலைவர் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story