கோவில் திருட்டில் ஈடுபட்டவர் உயிரிழப்பு - 5 பேர் மீது வழக்கு பதிவு

கோவில் திருட்டில் ஈடுபட்டவர் உயிரிழப்பு -  5 பேர் மீது வழக்கு பதிவு

சேகர்

ஊத்தங்கரை அருகே பெருமாள் கோவிலில் ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்ட நிலையில் திருடிய நபரிடம் இருந்து பொருட்களை மீட்க டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்து சென்று தாக்கியதில் திருடிய முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சின்னகணக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சொட்டை சேகர் என்கிற சேகர். சுமார் 65 வயது மதிக்கதக்க இவருக்கு கோவிகளில் திருடுவது என்பது பொழுதுபோக்கு மாதிரி. ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் திருடியதாக சுமார் 17க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த மாதத்தில் ஊனாம்பாளையாம் சுப்ரமணியம் என்பவரது வீட்டு கோவிலில் திருடியுள்ளார் . கொல்லப்பட்டி ஓம் சக்தி கோவிலில் திருடும் போதே கையும் களவுமாக சிக்கியுள்ளார் . மேலும் திருட்டு வழக்கில் கைது செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார் . சாமல்பட்டி பகுதியில் சின்னத்தம்பி என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து பித்தளை சாமான்களை திடுடிக்கொண்டு சாமல்பட்டி காவல் நிலையம் அருகே சாவகாசமாக நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் சொட்டை சேகரை தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் சுப்ரமணியம் இவரது வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆனா கிருஷ்னர் சிலையும் அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத வேலையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள் கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவைகளை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சொட்டை சேகரை சந்தேகித்த கிராம மக்கள் அவரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சொட்டை சேகர் நேற்று இரவு ஊணாம்பாளையம் பகுதியில் இருந்ததைக் கண்டு சுப்பிரமணியம் மற்றும் அவருடன் வந்தவர்கள் சொட்டை சேகரை பிடித்து விசாரித்ததில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள சீரங்கம் என்பவரது வீட்டிலும், அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் வீட்டிலும் பூஜை சாமான்கள் மற்றும் சிலைகளை சொட்டை சேகர் கொடுத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் டாட்டா ஏசி வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு புளியான்டப்பட்டி கிராமத்தில் அவர் கூறிய வீடுகளுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்பொழுது பூஜை சாமான்கள் மட்டும் கிடைத்துள்ளது. சாமி சிலைகளை வேறு எங்கோ மறைத்து வைத்துள்ளதாகவும் சொட்டைசேகர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அவரை தாக்கியுள்ளனர். இதில் சொட்டை சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இது குறித்து மத்தூர் போலீசருக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்த மத்தூர் போலீசார் ஊத்தங்கரை சென்று ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் சுப்பிரமணியம் மற்றும் அவருடன் சென்றவர்கள் சொட்டை சேகரை ஊத்தங்கரை காவல் நிலையம் அழைத்து செல்லாமல் ஊனாம்பாளையாம் கிராமத்தில் வைத்து அடித்து சித்திரவதை செய்து நேற்று மாலை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்தகொடூர சம்பவம் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரவு சொட்டை சேகர் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சொட்டை சேகர் மகள் தனது தந்தையை கொடூரமாக தாக்கி , விரல்நகங்களை பிடுங்கி, சாதிபேரை சொல்லி திட்டி, தன் கண்முன்னே அடித்து கொலை செய்ததாக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் சுப்பிரமணி உள்ளிட்ட 5பேர் மீது வன்கொடுமை உட்பட பணிரெண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story