ஸ்வீட் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - 2 பேர் கைது
கைதானவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழருவி என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் இரவு 11 மணிக்கு ஸ்வீட் கடையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை தீ வைத்து கடைக்குள் வீசி விட்டு தப்பிச் சென்றனர். சம்பவ குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள உடைந்த பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கே நின்று கொண்டு இருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த முஹம்மத் வசீம் மற்றும் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நர்மதன் என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் பேருந்து நிலையம் அருகில் கருணா இனிப்பகத்தில் கடந்த 30ம் தேதி இரவு பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீப்பற்ற வைத்து வீசிவிட்டு சென்றவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் என்பவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தன்னுடைய மனைவி உடன் சம்பவம் நடந்த இனிப்பக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த ஊழியரிடம் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடை ஊழியர் நந்த குமார் என்பவர் சத்தாம் என்பவரை அவரது மனைவி முன்பு அவதூறாக பேசிய காரணத்தால் முன்விரோதம் இருந்து வந்தது. இதனை பழிதீர்க்கும் வகையில் சத்தாம் தன்னுடைய நண்பர்களான முஹம்மத் வசீம், நர்மதன் உதவியுடன் பெட்ரோல் நிரப்பிய பாடில்களை தீ வைத்து ஸ்வீட் கடைக்குள் வீசியதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முஹம்மத் வசீம் மற்றும் நர்மதனன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சத்தாம் என்பவரை போலீசார் தேடி வரகின்றனர்.