போலீஸ் கஞ்சா விற்பனை விவகாரம் : இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 3 பேர் கைது

போலீஸ் கஞ்சா விற்பனை விவகாரம் : இன்ஸ்பெக்டர் மகன் உட்பட 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

ஊட்டியில் காவலரே கஞ்சா விற்று கைதான சம்பவத்தில் அவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மகன், உள்பட மேலும் 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டாலியன் பிரிவு காவலர் சவுந்தர்ராஜ் (29) கைது செய்யப்பட்டார். சவுந்தர்ராஜ் என்ஜினியரிங் படித்து, துறை மாறி காவலர் தேர்வு எழுதி காவலராகி, குறுக்கு வழியில் வாழ்க்கையில் உயர நினைத்து கஞ்சா வியாபாரியாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சவுந்தர்ராஜ் பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவருடன் மேலும் ஒரு சில காவலர்கள் உடந்தையாக இருந்ததும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் யசோதா மேற்பார்வையில், ஊட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் எஸ்.ஐ., பிரகாஷ், காவல்ர்கள் ஈஸ்வரன், சசிகுமார், மனோஜ்குமார், பார்த்திபன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தனிப்படை போலீஸார் பல இடங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவலர் சவுந்தரராஜனுடன் சேர்ந்து, மதுரையை சேர்ந்த கோகுல் (30), தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்கி சுந்தரம் (26), மற்றும் செல்வ முருகன் (35) ஆகிய 3 பேரும் கஞ்சா மொத்த வியாபாரியான தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டிசெல்வம் என்ற முக்கிய கஞ்சா வியாபாரியுடன் தொடர்பிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

கஞ்சா விற்பனை தவிர முழு நேரமாக வேறு வழக்கமான பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் கோகுல் மதுரை சி.பி.ஐ., பிரிவில் பணியாற்றும் ஆய்வாளர் ஒருவரின் மகன். மதுரையில் உள்ள கோகுல் தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். பட்டப்படிப்பு முடித்துள்ள கல்கி சுந்தரம் சொந்த தோட்டத்தில் விவசாயமும், செல்வ முருகன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தனர். இவர்கள் கூட்டாக செயல்பட்டு ஒரு கிலோ கஞ்சாவை ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கி சில்லரை முறையில் ஒரு கிலோ கஞ்சாவை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்து கடந்த சில ஆண்டுகளில் பல லட்சங்கள் வருமானம் பார்த்துள்ளனர். காவலர் சவுந்தரராஜ் கைதான தகவல் தெரிந்ததால், கோகுல் உள்பட பலரும் தங்கள் கைவசம் இருந்த கஞ்சாவை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டதால், தற்போது கைதான போது பெரிய அளவில் கஞ்சா கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story