சொத்து பிரச்சனை : சொந்த சித்தப்பாவை கொளுத்திய மகன்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் (55), என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (26) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. செந்தில் தனது நிலத்திற்கு, சின்னவன் நிலம் வழியாக செல்ல வேண்டிய சூழல் இருந்ததால், தனது நிலத்தின் வழியாக வரக்கூடாது, வேறு பாதையில் செல்ல வேண்டும் என சின்னவன் அவ்வப்போது செந்தில் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி செந்தில் தனது டிராக்டர் வாகனத்தில் விவசாய நிலத்திற்கு நெல் எடுக்க செல்லும் போது, தங்கள் வழிப்பாதையில் செல்லக்கூடாது, எனக்கூறி சின்னவன் மற்றும் அவரின் குடும்பத்தினர் செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு குடும்பங்களுக்கிடையே கைகளைப்பாக மாறியது. இது தொடர்பாக செந்திலின் தாய் ராணி (60) கொடுத்த புகாரின் பேரில், காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் சின்னவன் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டவுடன் நான்கு பேரும் தலை மறைவாகினர்.
இந்த நிலையில் இன்று காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனது மாட்டு தீவன கடையில் அமர்ந்திருந்த சின்னவனை பார்த்த செந்தில் தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை சின்னவன் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார். இதில் முழுவதுமாக தீப்பற்றி எரிந்த சின்னவனை அருகில் இருந்தவர்கள் தீயை அனைத்து, அவரை மீட்டு தனியார் வாகனம் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த தீ விதத்தில் சுமார் 70 சதவீத தீக்காயங்களுடன் சின்னவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலத்திற்கு செல்லும் வழி பிரச்சினை தொடர்பாக தனது சொந்த சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காவேரிப்பட்டிணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.