ஆசிரியர் வீட்டில் கொள்ளை : 4பேர் கைது, நகைகள் மீட்பு

ஆசிரியர் வீட்டில் கொள்ளை :  4பேர் கைது, நகைகள் மீட்பு

கைது செய்யப்பட்டவர்கள் 

நாலாட்டின்புதூர் அருகே ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளை திருடிச்சென்ற 4பேரை போலீசார் கைது செய்து, ரூ.2.25லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.கே சிந்தன் நகரை சேர்ந்த தருமக்கண் மகன் மணி (56) என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17.05.2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் கடந்த 25.05.2024 அன்று திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையில் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கட்டாலங்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த காரில் வந்தவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர்களான அருணாச்சலம் மகன் கடல்மணி (49), தங்கசாமி மகன்களான ராமச்சந்திரன் (எ) ராம்சேட்டு (32) சரவணன் (34) மற்றும் முருகன் அயோத்தி ராமர் (34) ஆகியோர் என்பதும், அவர்கள் ஆசிரியரான மணி வீட்டில் தங்க நகைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் கடல்மணி, ராமச்சந்திரன் (எ) ராம்சேட்டு, அயோத்தி ராமர் மற்றும் சரணன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2லட்சத்து 25ஆயிரம் மதிப்புள்ள 7½ பவுன் தங்க நகைகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story