சேலத்தில் ஆன்லைன் மூலம் முதியவரிடம் ரூ.1.35 கோடி மோசடி

சேலத்தில் ஆன்லைன் மூலம் முதியவரிடம் ரூ.1.35 கோடி மோசடி

இணையவழி மோசடி 

சேலத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி முதியவரிடம் ரூ.1.35 கோடி மோசடி செய்தது குறித்தும், டெலிகிராமில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்தது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ரெட்டியூர் சிவாயநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). இவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்றும், இதற்காக ஒரு இணையதள முகவரியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் பணம் இரட்டிப்பு கிடைக்கும் என்று ஆசையில் அந்த இணையதள முகவரியில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குக்கு பல தவணைகளில் ரூ.1 கோடியே 35 லட்சம் வரை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு கூறியபடி வங்கி கணக்கில் பணம் எதுவும் திருப்பி அனுப்பவில்லை. இதனால் மோசடி செய்ததை அறிந்த கார்த்திகேயன், இதுபற்றி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் முதியவரிடம் பணம் மோசடி செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அஸ்தம்பட்டியை சேர்ந்த 32 வயதான வாலிபர் ஒருவரிடம் டெலிகிராமில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.67 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story