சாத்தான்குளம் அருகே ரூ.50 லட்சம் முறைகேடு: 3போ் பணிஇடைநீக்கம்

சாத்தான்குளம் அருகே ரூ.50 லட்சம் முறைகேடு: 3போ் பணிஇடைநீக்கம்

கோப்பு படம் 

சாத்தான்குளம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமாா் ரூ.50 லட்சம் முறைகேடு செய்ததாக, சங்க செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது . இதன் செயலராக அகமது என்பவா் பணியாற்றி வந்தாா்.

அவா் இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில கடன் சங்கத்தில் தணிக்கை பணி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதில் சுமாா் ரூ.50 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சங்க செயலா் அகமது, அவருக்கு உடந்தையாக இருந்ததாக பணியாளா்கள் அமுதா,சுப்பிரமணியன் ஆகியோா் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் கலுங்குவிளை கூட்டுறவு சங்க பொறுப்பு அலுவலா்களாக சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து இருவா் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் பிரபாவதி மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கணக்குகளை நேற்று ஆய்வு செய்தனர். இதுபற்றி அறிந்த சங்க உறுப்பினர்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தில் நிதி முறைகேடு தொடா்பாக கடந்த 3 ஆண்டுகளாக புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என செயலாட்சியா் மீது குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசு ராஜசேகரன், உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story