கஞ்சா விற்பனை - 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
சேலம் கன்னங்குறிச்சி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (22). இவர் கடந்த அக்டோபர் மாதம் தனது கூட்டாளிகளான அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), ஹரிபாஸ்கர் (21), சஞ்சீவ் (22) மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெட்லி சிபி (22) ஆகியோருடன் சேர்ந்து அஸ்தம்பட்டி பிள்ளையார் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் கேசவன் உள்பட 5 பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. கேசவன் உள்பட 5 பேரும் கஞ்சா விற்பனையை நிறுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொது சுகாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு, துணை கமிஷனர் பிருந்தா பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து கேசவன், மணிகண்டன், ஹரி பாஸ்கர், சஞ்சீவ் மற்றும் ஜெட்லி சிபி ஆகியோரை ''மருந்து சரக்கு குற்றவாளிகள்'' என்ற பிரிவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.