நண்பரை கொன்று பிணத்துடன் 2 நாட்கள் வசித்தேன்’ - பரபரப்பு வாக்குமூலம்

நண்பரை கொன்று பிணத்துடன் 2 நாட்கள் வசித்தேன்’ - பரபரப்பு வாக்குமூலம்

பிரபாகரன் 

நண்பருடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்து கொலை செய்து அவரது பிணத்துடன் 2 நாட்கள் வீட்டில் வசித்தேன் என தொழிலாளி கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள நடைமேடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் 2 பேர் படுத்திருந்தனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொலை செய்தவரை பிடித்து தாக்கினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற டவுன் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் நெத்திமேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 54) என்பது தெரியவந்தது. மேலும் கொலையானவர் குறித்து உடனடியாக தெரியவில்லை. பின்னர் போலீசார் அவரது புகைப்படம் மூலம் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பரமசிவம் (40) என்பதும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- நானும், பரமசிவமும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களிடையே ஏற்பட்ட தகராறில் பரமசிவத்தை கல்லால் தாக்கி கொன்றேன். இதேபோன்று நான் கடந்த 2021-ம் ஆண்டு நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் நண்பரின் உடலுடன் 2 நாட்கள் வரை வீட்டில் வசித்தேன். துர்நாற்றம் வீசிய பிறகு அக்கம் பக்கத்தினர் தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை வழக்கு தொடர்பாக என்னை கைது செய்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த நான் சம்பவத்தன்று மது குடிக்கும் தகராறில் பரமசிவத்தை கொலை செய்து விட்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதனிடையே பொதுமக்கள் தாக்குதலில் காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story